Wednesday, December 31, 2025
Wednesday, December 31, 2025
Home » தினமும் சோப் போட்டு குளிப்பதால் சருமத்திற்கு தீங்கு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தினமும் சோப் போட்டு குளிப்பதால் சருமத்திற்கு தீங்கு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

by thektvnews
0 comments
தினமும் சோப் போட்டு குளிப்பதால் சருமத்திற்கு தீங்கு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சோப் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. ஆனால், தினமும் சோப் பயன்படுத்துவது உண்மையில் தேவையா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இதற்கான மருத்துவ விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.


சோப் இல்லாமல் குளிப்பது போதுமானதா?

கடலூரைச் சேர்ந்த குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இளந்திரையன், சமீபத்தில் தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:

“நம் உடலில் உள்ள இறந்த செல்கள், கிருமிகள் ஆகியவை இயல்பாகவே சருமத்தின் மேற்பரப்பில் மிக லேசாக படிந்திருக்கும். அவற்றை அகற்ற சோப் தேவையில்லை. கைகளால் நன்கு தேய்த்து குளித்தாலே போதும்.”

அவர் மேலும் கூறியதாவது, சோப்பின் pH அளவீடு நம் சருமத்தின் இயல்பான அமிலத்தன்மையை மாற்றிவிடுகிறது. இதனால் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு பாதிக்கப்படுகிறது. இதுவே கிருமி தொற்றுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

banner

சோப்பின் பக்கவிளைவுகள்

சோப்புகள் பெரும்பாலும் காரத்தன்மை கொண்டவை. ஆனால், நம் சருமத்தின் இயல்பு அமிலத்தன்மை கொண்டது. சோப்பின் காரத்தன்மை, சருமத்தின் இயல்பை குலைக்கிறது. இதனால்:

  • சரும உலர்ச்சி ஏற்படலாம்
  • அரிப்பு மற்றும் எரிச்சல் தோன்றலாம்
  • கிருமி தொற்றுகள் எளிதில் பரவலாம்

டாக்டர் இளந்திரையன் கூறுவதுபோல், “சோப்பின் மருத்துவ பயன் எதுவும் இல்லை; பழக்கத்திற்காகவே மக்கள் அதை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்” என்றார்.


சோப்பை தவிர்க்க முடியாத சூழல்கள்

இதே விவகாரத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சரும நிபுணர் டாக்டர் சௌமியா டோகிபார்த்தி வேறுபட்ட கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில்:

“இன்றைய மாசு நிறைந்த சூழலில், சோப்பை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை. குறிப்பாக வியர்வை மிகுந்தவர்கள், தூசி நிறைந்த இடங்களில் பணிபுரிபவர்கள், வெளிப்புறப் பயணிகள் ஆகியோருக்கு சோப் அவசியம்.”

அவரின் கூற்றுப்படி, சரியான சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.


சருமத்துக்கு ஏற்ற சோப் எப்படி தேர்வு செய்வது?

சோப்பை தேர்ந்தெடுக்கும் போது அதன் Total Fatty Matter (TFM) அளவைப் பார்ப்பது மிக முக்கியம். அது 70%-க்கு மேல் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால், அது சருமத்தை உலரச்செய்யும்.

அவர் கூறிய சில ஆலோசனைகள்:

  • வறண்ட சருமம் உள்ளவர்கள் Shea Butter Soap அல்லது Moisturizing Soap பயன்படுத்தலாம்.
  • அதிக வியர்வை உள்ளவர்கள் நறுமண சோப்புகளை பயன்படுத்தலாம்.
  • Oily சருமம் உள்ளவர்கள், மென்மையான, கிருமி எதிர்ப்பு சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சோப் இல்லாமல் வாழ முடியுமா?

மாசு இல்லாத பகுதி, தூய்மையான நீரோடை, குறைந்த வியர்வை போன்ற சூழலில் வாழ்கிறவர்கள் சோப்பை தவிர்த்துவிடலாம். ஆனால் நகரங்களில், தூசு மற்றும் மாசு நிறைந்த சூழலில் வாழ்கிறவர்களுக்கு சோப் அவசியம்.

தினமும் சோப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து முழுமையாக உண்மை அல்ல. ஆனால், சரியான சோப்பை தேர்ந்தெடுத்து, மிதமாக பயன்படுத்துவது தான் நல்லது.

சருமத்தின் இயல்பை காக்கும் விதத்தில் குளிக்கும் பழக்கம் உருவாக்குவது அவசியம். சோப்பை தவிர்க்க விரும்பினால், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை அதற்கேற்ப இருக்க வேண்டும்.

மருத்துவர்கள் சொல்வது ஒன்றேசோப்பை சரியான முறையில், சரியான அளவில் பயன்படுத்துங்கள். அதுவே ஆரோக்கியமான சருமத்தின் ரகசியம்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!